போபால்

த்தியப்  பிரதேச அரசு அலுவலகங்களில் இனி கோமியத்தால் தயாரிக்கப்பட்ட் பினாயில் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.   பாஜக ஆளும் மாநிலங்களில் பசுஞ்சாணம், கோமியம் போன்றவற்றுக்கு முன்னிடம் வழங்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் பசுஞ்சாணம் மற்றும் கோமியம் மிகச் சிறந்த கிருமி நாசினி என பாஜகவினர் கூறி வருகின்றனர்.  இதையொட்டி கோமியம் மூலம் பினாயில் தயாரிக்கும் பணியை அரசு ஊக்குவித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இவ்விதம் கோமிய  பினாயில் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியப் பிரதேச அரசின் விலங்குகள் நலத்துறை கோமியத்தை வழங்க உள்ளது.  மேலும் இவ்வாறு கோமியத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை மட்டுமே அரசு அலுவலகங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   மேலும் இந்த நடவடிக்கை மூலம் பால் வற்றிப்போன பசுக்களை கவனிக்காத நிலை மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தனியார் தயாரிக்கும் கோமிய பினாயிலை அரசு வர்த்தக ரீதியாக முன்னிறுத்துவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குனால்  சவுத்ரி, “அரசின் இந்த முடிவு எவ்வித உள்கட்டமைப்பும் செய்யாமல் எடுக்கப்பட்டுள்ளது.  பசுவின் பொருட்களை வர்த்தக ரீதியாக முன்னேற்ற நினைக்கும் அரசு அதை அரசு மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.  தற்போது அரசின் இந்த அறிவிப்பால் உத்தரகாண்ட மாநில நிறுவனங்கள் மட்டுமே  பயனடையும்” எனத் தெரிவித்துள்ளார்.