மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் இந்தோர் – இச்சாப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக புர்ஹான்பூர் மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், அந்த நபரை அவரது மனைவியே கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்துபோன 25 வயதான ராகுல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

17 வயதே ஆன இவரது மனைவிக்கு யுவராஜ் என்ற ஆணுடன் தொடர்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் யுவராஜுடன் வாழத் துடித்த அந்த பெண் தனது காதலன் யோசனைப்படி கணவருடன் ஷாப்பிங் சென்று விட்டு இரவு உணவருந்தி விட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் வந்தபோது, தனது காலில் இருந்து செருப்பு விழுந்துவிட்டதாகக் கூறி அந்தப் பெண் வண்டியை நிறுத்தச் செய்து கீழே இறங்கியுள்ளார்.

அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த யுவராஜின் நண்பர்கள் இரண்டு பேர் ராகுலை உடைந்த பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

36 முறை குத்தப்பட்ட ராகுல் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனை தனது காதலன் யுவராஜுக்கு வீடியோ கால் மூலம் காண்பித்த அந்த பெண் அவரது மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து ராகுலின் உடலை சாலையின் ஓரம் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், யுவராஜுடன் சேர்ந்து தலைமறைவான நிலையில் சடலத்தை மீட்ட காவல்துறையினர் இதுகுறித்து ராகுல் குடும்பத்தினர் அளித்த தகவலைக் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், ராகுலுக்கு நான்கு மாதங்கள் திருமணமானதும், மனைவியுடன் வெளியில் சென்ற ராகுல் வீடு திரும்பவில்லை என்றும் தெரியவந்தது.

மேலும், தலைமறைவாக இருந்த பெண்னை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய யுவராஜ், லலித் மற்றும் அந்த பெண் உட்பட 18 வயதுக்கு உட்பட்ட மற்றொரு குற்றவாளி என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.