டில்லி
மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது.
கடந்த 1938 முதல் மோட்டார் வாகனச் சட்டம் அமுலில் உள்ளது. இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்து அந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அந்த மசோதா நிறைவேறவில்லிஅ. எனவே மீண்டும் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பு அதிகரிப்பு, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. நேற்று இந்த மசோதாவின் மீது கடும் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் மசோதாவைக் கடுமையாக எதிர்த்தன. திமுகவைச் சேர்ந்த கனிமொழி இந்த மசோதாவில் உள்ள ஓட்டுநர்களின் கல்வித் தகுதி பற்றிய விதிக்கு கடுமெதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. எங்கள் நோக்கம் சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்தில், நவீனத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவை மட்டுமே ஆகும். இச்சட்டத்தின் படி மாநிலங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம்.
மேலும் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தைக் கையாளுவது ஆகியவற்றுக்காக, தேசிய போக்குவரத்து கொள்கை உருவாக்கப்படும். இது குறித்து எந்த முடிவும் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பின்பே எடுக்கப்படும். தனிப்பட்ட பொறியாளர்கள் மூலம் சாலை போக்குவரத்தை கண்காணிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இனி நிபுணத்துவம் வாய்ந்த குழு அடங்கிய நிறுவனங்கள், கண்காணிக்கும்.” என விளக்கம் அளித்தார்.
அதன் பிறகு இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.