நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் முகநூல் பதிவு…
ருத்துவ சேவையில் மகத்தான சாதனை படைத்த பல டாக்டர்களை சமூகத்துக்கு தந்திருக்கிறது நமது சென்னை மாநகரம். அந்த வரிசையில் புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் மருத்துவர் சாந்தா. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சியில் டாக்டர் சாந்தாவின் பங்களிப்பு உலகம் முழுவதும் பாராட்டு பெற்றது.
ஏராளமான உயரிய விருதுகள் சாந்தாவை தேடி வந்தன. மகசேசே, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா, அவ்வையார், அன்னை தெரசா விருதுகள் அவற்றில் முக்கியமானவை. விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தார்.
மயிலாப்பூரில் 1927 மார்ச் 11ல் பிறந்தார் சாந்தா. விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவ கல்லூரியில் 1949 ல் டாக்டர் பட்டமும், 1955 ல் எம்.டி பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டராக பணியை தொடங்கினார்.
12 படுக்கைகளுடன் இயங்கிவந்த அடையாறு மருத்துவமனையை தனது குரு கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாக வளர்த்தெடுத்தார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றவர் சாந்தா. இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழு, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட், இந்திய புற்று நோய் இயல் கழகம் என பல அமைப்புகளில் பொறுப்பு வகித்து சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகில் புற்றுநோய்க்கு எங்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், உடனடியாக அறிமுகம் செய்வதை கடமையாக கொண்டிருந்தார்.
கேன்சர் என்றால் மரணம் நிச்சயம் என்று சமூகத்தில் பரவலாக நிலவிய நம்பிக்கையை தகர்க்க சாந்தா தொடர்ந்து போராடினார். சினிமாவில் கேன்சர் நோயாளிகளை சித்தரிக்கும் விதம் தவறானது என வாதாடி புரிய வைத்தார். ஆரம்ப கட்டத்திலேயே கேன்சரை கண்டு பிடித்தால் விரைவாகவும் முழுமையாகவும் குணப்படுத்த முடியும் என்பதை பள்ளிக்கூடங்கள் முதல் உயர்மட்ட மாநாடுகள் வரை நேரில் சென்று உதாரணங்களுடன் வலியுறுத்தினார்.
கேன்சரில் இருந்து மீண்டவர்கள் மூலமாக ”இது குணப்படுத்தக் கூடிய நோய்தான், மரணத்தில் முடிவது அல்ல” என்ற உண்மையை தென் இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பரப்பினார். சென்னையின் அடையாளமாக அடையார் கேன்சர் ஆஸ்பிடலை உருவாக்கிய சாந்தா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94. எண்ணற்ற டாக்டர்களுக்கு மட்டுமல்ல, ”எந்த தொழிலை செய்தாலும் அதில் அர்ப்பணிப்போடு செயல்பட்டால் தடைகளை எல்லாம் தாண்டி இலக்கை அடைய முடியும்” என்பதற்கு எல்லோருக்கும் உதாரணமாக திகழ்ந்தவர் அன்னை சாந்தா.
அவர் வாழ்ந்த கேன்சர் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சாந்தாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னைவாசிகள் சாரிசாரியாக சென்று கொண்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் இருந்து கண்ணீர் அஞ்சலி செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன