குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி அந்த நபரின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மும்பையைச் சேர்ந்த கருவுறுதல் மையம் ஒன்றில் திருமணமாகாமல் இறந்துபோன தனது மகனின் விந்தணு பாதுக்கப்பட்டதாகக் கூறினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வரும்போது, அவரது விந்துவை சேகரிக்குமாறு அவர் பரிந்துரைத்திருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது மகன் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணமாகாமல் இறந்துபோன தனது மகன் குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் மரண தருவாயில் அவரது மரணத்திற்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட விந்தணுவை அழிக்க ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகன் இறந்ததை அடுத்து கருவுறுதல் மையத்தில் பாதுகாக்கப்பட்ட விந்தணுவை அழிக்க அந்த மையம் தீர்மானித்துள்ளதாக அவருக்கு தகவலளித்துள்ளது.
இதையடுத்து, தனது மகனின் பாதுகாக்கப்பட்ட விந்தணுவை மும்பை கருவுறுதல் மையத்தில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த IVF மையத்திற்கு விந்தணுக்களை மாற்றுமாறு கோரியிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த கருவுறுதல் மையம் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும் மேற்பார்வையிடவும் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திடம் அனுமதி பெற பரிந்துரைத்தது.
இதைத் தொடர்ந்து குடும்ப வம்சாவளியைத் தொடர தனது மகனின் விந்தணுவை தானம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2021 ஆம் ஆண்டு உதவி இனப்பெருக்கச் சட்டத்தின் விதிகளின் கீழ், ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவரது விந்தணுக்களைப் பாதுகாப்பது குறித்து மனுதாரர் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.
தவிர, மரண தருவாயில் மகன் தங்களை கலந்தாலோசிக்காமல் அவரது மரணத்திற்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட விந்தணுவை அழிக்க ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியதையும் கருத்தில் கொண்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஜூன் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் மறுஉத்தரவு வரும் வரை மனுதாரர் மகனின் விந்தணுவை பாதுகாப்பாக வைக்கவும் அந்த கருவுறுதல் மையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.