சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அலுவல் விஷயமாக நேற்று டெல்லி சென்ற நிலையில், அவர் சென்ற விஸ்தாரா விமானத்தில், ஏறிய இளம் தம்பதியினிரின் குழந்தை தொடர்ந்து, அழுதுகொண்டிருந்ததால், அந்த குழந்தையின் பெற்றோர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விமானம் புறப்பட்டுச் சென்றது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல பாஜக தலைவர்களுடன் இரண்டு நாள் அரசுமுறை சந்திப்புக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (திங்கள்கிழமை) மதியம், சென்னையில் இருந்து டெல்லி சென்றார். விமானம், முற்பகல் 11.55 மணிக்கு 94 பயணிகளுடன் விமானம் புறப்பட இருந்தது. அந்தவிமானத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி செல்ல ஏறி இருந்தார். விமானப் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறியதும், நான்கு மாத குழந்தை ஒன்று, தொடர்ந்து அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் தாய் லட்சுமி (வயது 30) உள்பட அவரது கணவர் ராகுல் குழந்தையை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும், குழந்தை அழுவதை நிறுத்தாதால் விமானத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால், விமானத்தில் பயணித்தவர்கள் குழந்தையின் கூக்குரல் தொந்தரவு செய்வதாகக் கூறி புகார்களை எழுப்பத் தொடங்கினர். விமான பயணிகள் சிலர், அந்த குழந்தையுடன் தம்பதிகளை இறக்கி விடுமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது. விமானப் பணிப்பெண்களும் குழந்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, அதுவும் தோல்வியடைந்தது. இந்த சம்பவம் காரணமாக விமானம் தாமதமானது, இதையடுத்து, அந்த குழந்தையுடன் இளம்தம்பதியினர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இதனால், விமானம் மதியம் 12.15 மணிக்கு தாயும் குழந்தையும் இல்லாமல் புறப்பட்டது.
பொதுவாக விமான பயணத்தின்போது, கைக்குழந்தைகள் அழும் காட்சிகள் பொதுவானவை. அப்போது, விமான உதவியாளர்கள் பெற்றோருக்கு உதவு, குழந்தை அழுவதை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், நேற்றைய விஷயத்தில், விமான பணிப்பெண் மூலம், குழந்தையின் தாயிடம் பேசி, விமானத்தை நிறுத்தி இறக்கி விட பணித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரம், அதில் பயணம் செய்த முதல்வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதித்ததா, அல்லது அவரது அறிவுறுத்தல் காரணமாக குழந்தையுடன் இளம் தம்பதி விமானத்தில் இருந்த இறக்கிவிடப்பட்டார்களா என்பகு குறித்து தெரியவில்லை.
ஆனால், ஆரம்பத்தில், குழந்தையின் தாய் லட்சுமி தேவி விமானத்தில் இறங்க மறுத்ததாகவும், , ஆனால் பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக விமானம் 15 நிமிடங்கள் தாமதமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத்தொடர்ந்தே, மதியம் 12.15 மணிக்கு முதல்வர் மற்றும் 92 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. தாயும் குழந்தையும் காத்திருப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை 5.30 மணியளவில் டெல்லிக்கு மற்றொரு விஸ்டாரா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.