இந்தியாவின் பின்லேடன் என்று வர்ணிக்கப்படும் கொடூர பயங்கரவாதியான அப்துல் சுபன் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 26, 2008ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். டிபன் பாக்ஸ்களிலும், இருசக்கர வாகனங்களிலும் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த அங்காடிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 56 பேர் மரணமடைந்தனர்.
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதலில் மூளையாக இருந்து வெடிகுண்டு தயாரித்தவராக கண்டறியப்பட்டவர் அப்துல் சுபன் குரேஷி. , வயது 46.
மென்பொருள் பொறியாளரான இவர், சிமி (SIMI) இயக்கத்தில் இணைந்து வெடிகுண்டு தயாரிப்பில் இறங்கி, பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டார். பிறகு இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை நிறுவி பல்வேறு பயங்கரவாத செயல்கள் புரிந்தார்.
குஜராத் தாக்குதல் மட்டுமல்லாது, 2006 மும்பை மின்சார ரயில் குண்டுவெடிப்பு சம்பவம், 2010 டெல்லி தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர், 2014 பெங்களூருவில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தார். இவரை தேசிய பாதுகாப்பு முகமை இந்தியாவின் மிகவும் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.
குஜராத் தாக்குதலுக்கு பின்னர், தலைமறைவான குரேஷி, போலி ஆவணங்கள் மூலம் நேபாள நாட்டிற்கு சென்று, அங்கு தலைமறைவாக இருந்தார். பிறகு 2013 முதல் 2015 காலகட்டத்தில் சவுதி அரேபியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு, நிலையில் வங்காளதேசத்தில் குரேஷி இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், டில்லி காசிபூர் பகுதியில் பதுங்கியிருந்த குரேஷியை டில்லி காவல்துறை கைது செய்தது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சிமி (Students Islamic Movement of India) மற்றும் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளை மீண்டும் புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் குரேஷி இந்தியாவிற்கு வந்ததாக, காவல்துறை அதிகாரி பிரமோத் குஷ்வாஹா தெரிவித்தார்.
அப்துல் சுபன் குரேஷி இந்தியாவின் Bin-Laden என்று அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.