டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டனர். நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்பை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றின் லேசான அறிகுறி தெரிந்தது. இதையடுத்து, பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருந்துவர்களின் ஆலோசனை படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.