morning-news1-full
சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி சிவகங்கை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிவகங்கை அருகே காளமேக்கி என்ற கிராமத்தில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தேனி, திருச்சி, மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேன்கள் மூலம் ஏராளமான காளைகள், நேற்று முன்தினம் இரவு காளமேக்கி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டன. நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஜல்லிக்கட்டுக்கு தயாராக இருந்த 6 காளைகள், அவற்றைக் கொண்டு வந்த 5 சரக்கு வேன்கள் மற்றும் 16 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட காளைகள் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் விமான படைதள சுவரில் லாரி மோதல்: கோவையை அடுத்த சூலூர் விமானப்படைத் தளத்தின் மெயின் கேட் அருகே காங்கிரீட் கலவை லாரி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு காங்கிரீட் கலவை லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூலூர் விமானப்படைத்தளம் மெயின் கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென விமானப்படைத்தள சுவரில் மோதியது. இதில், டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விமானப்படை அலுவலர்கள், சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
எச்சரிக்கை:  1000 ரூபாய் நோட்டா? கள்ளநோட்டாகவும் இருக்கலாம் உத்தமபாளையம் : நாடு முழுவதும் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன
12,000 லிட்டர் பெட்ரோலுடன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: கோவையில் இருந்து அறந்தாங்கிக்கு 12,000 லிட்டர் பெட்ரோலுடன் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ராசிபுரத்தை சேர்ந்த ரமேஷ் (46) என்பவர் ஓட்டினார். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி, கொள்ளுதண்ணிப்பட்டி வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
புதரில் கிடந்த 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மேய்ச்சல் நிலத்தில் உள்ள புதரில் சாக்குமூட்டையில் 2 ஐம்பொன் சிலைகள் இருந்துள்ளன. இதை அங்கு ஆடு மேய்க்கச் சென்ற நாகராஜ் என்பவர் நேற்று பார்த்து விவசாயிகள் சங்க நிர்வாகி கண்ணனிடம் தெரிவித்தார். ஒன்றே முக்கால் அடி உயரமும், 8 கிலோ எடையுடனும் கூடிய அய்யனார் சாமி சிலையும், ஒன்றரை அடி உயரம், 7 கிலோ எடையும் கொண்ட அம்மன் சிலையும் ஆகும். சிலைகளை கடத்தி வந்தவர்கள், புதரில் போட்டு விட்டு, சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
திருச்சியில் மாவட்ட அளவிலான வில்வித்தை: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டியில் 65 பேர் பங்கேற்றனர்.
இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறு திருவனந்தபுரம் நேமம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது(28). இவரது பேஸ்புக் பக்கத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிடப்படு வதாக, திருவனந்தபுரம் பாஜ செயலாளர் சுரேஷ், போலீஸ் கமிஷனர் சர்ஜன் குமாரிடம் புகார் தெரிவித்தார்.  இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், திருவனந்தபுரம் ஐஜி மனோஜ் ஆப்ரகாம் தலைமையிலான போலீசார் சாகுல் ஹமீதை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வேறு யாரோ ஊடுருவி அவதூறு கருத்துகளை பரப்புவதாக சாகுல் ஹமீது கூறினார். இதையடுத்து பல மணி நேர விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார்.
சின்னமனூர் அருகே நடந்தது ஏலம் ஊராட்சி தலைவர் பதவி 5 லட்சத்துக்கு விற்பனை:  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஊராட்சியில் கிராமக் கூட்டம் நடத்தப்பட்டு, தலைவர், உறுப்பினர்களை ஏல முறையில் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. தலைவருக்கு 10 லட்சம், உதவித் தலைவருக்கு ₹5 லட்சம், ஊராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சம் என தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ஏலத்தொகை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் தொகை பாதியாக குறைக்கப்பட்டது.
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை ₹5 லட்சமும், உதவித் தலைவராக தேர்வான ரவி இரண்டரை லட்சம் ரூபாயும் செலுத்தினர்.ஊராட்சி உறுப்பினர்களாக குலுக்கல் முறையில் தேர்வான 6 பேர் தலா 50 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளனர். ஒரு ஊராட்சி உறுப்பினரை மட்டும் தேர்வு செய்ய எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமலேயே அய்யம்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகிகள் ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் தெரிவித்தார்.
பிகார்: மது விலக்குக்கு புதிய சட்டம் பிறப்பித்தது நிதீஷ் அரசு
பிகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை அந்த மாநிலத்தை ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளது. மதுவிலக்கு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருநாட்களே ஆகியுள்ள நிலையில், பிகார் அரசு புதிய சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.
தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் திமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி கோவை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் திமுக பிரமுகர் அந்தக் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக லாரிகளை அனுமதிக்காவிட்டால் அக்.5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் கர்நாடக மாநிலத்துக்குள் தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால், திட்டமிட்டப்படி வரும் 5-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்றார் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி.
அதிமுக வேட்பாளரின் கணவர் அடித்துக் கொலை குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் தெரு 19-ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மலரின் கணவர் சுப்பிரமணி அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
தசரா திருவிழாவுக்கான வசதிகள்: இந்து மக்கள் கட்சி கோரிக்கை செங்கல்பட்டில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் தசரா திருவிழாவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாக்.,ஐ பயங்கரவாத நாடாக அறிவிக்க குரல் கொடுப்போம்: பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பது தொடர்பான ஆன்லைனில் பொது கருத்துகேட்பை அமெரிக்க வெள்ளை மாளிகை தொடங்கி உள்ளது. இதற்காக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் துவங்கப்பட்டுள்ள லிங்க்.,ல் சென்று அனைவரும் தங்களின் கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த கருத்து கேட்பில் பதிவு செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அமெரிக்கா முடிவு செய்ய உள்ளது.
இதோ கருத்து கேட்பில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் : 1 . www.whitehouse.gov அல்லது https://petitions.whitehouse.gov/petition/we-people-ask-administration-declare-pakistan-state-sponsor-terrorism-hr6069இணைப்பில் லாக் ஆன்( log on) செய்து உள்ளே செல்ல வேண்டும்.
2. அந்த பக்கத்தின் மேலே காணப்படும் participate என்ற பட்டனை அழுத்த வேண்டும்.3. அதில் உள்ள பிரிவுகளில் ” we the people petitions” என்ற பட்டனை அழுத்தி கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும்.4. அந்த கோரிக்கைகளில் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிளிக் செய்ய வேண்டும்.5. பின்னர் sign up செய்து உங்களின் பெயர் மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.6.
இப்போது உங்களின் இமெயில் முகவரிக்கு உங்களின் கோரிக்கை பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்யும் இமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்களின் கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும். உடனடியாக உங்களின் கோரிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.இந்த பக்கத்தில் அக்டோபர் 21ம் தேதி வரை மக்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்யலாம்
லடாக்-லே-கார்கில் செல்கிறார் ராஜ்நாத் சிங்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதிக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
நாளை கார்கில் பகுதிக்கு சென்று ராணுவ உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். தற்போது எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்தும், ஆலோசனை நடத்த உள்ளார்.
வடசென்னை அனல்மின் நிலையம்: மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல்நிலை முதல் அலகில் பழுதால் நிறுத்தப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அனல்மின் நிலையத்தில் முதல்நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
காவிரிப் பிரச்னையில் மோடி, சோனியா தலையிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்: காவிரிப் பிரச்னையில் நரேந்திர மோடியும், சோனியாவும் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
உண்டியல் காணிக்கை ரூ. 2.95 கோடி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.95 கோடி வசூலானது. திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது, உண்டியலில் காணிக்கையை செலுத்தி வருகின்றனர். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.95 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சாலையில் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படும் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கன்னியாகுமரி காந்தி மண்டப அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி mகன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அஸ்தி கட்டடத்தில் விழுந்த அபூர்வ சூரிய ஒளி. காந்தி ஜயந்தியையொட்டி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அஸ்தி கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளியை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியந்தனர்.
முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மோடியிடம் ஆலோசனை பெற இரோம் ஷர்மிளா விருப்பம் தேர்தலில் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசனை பெற ‘இரும்புப் பெண்’ இரோம் ஷர்மிளா விருப்பம் தெரிவித்துள்ளார்
சுங்கச்சாவடிகளில் சில்லரை பிரச்னைக்கு தீர்வு:  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், கட்டணங்களை மாற்றியமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்படும் தாமதத்தால், நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் நிலவுகிறது; இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்த கமிட்டி, ‘சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதத்தால், டீசல், பெட்ரோல் போன்றவை பெருமளவு விரயமாவதுடன், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது’ என, கூறியிருந்தது. இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதில் மாற்றங்களை ஏற்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுங்கச்சாவடிகளில் காலதாமதம் ஏற்படுவதற்கு, சில்லரை தட்டுப்பாடும் காரணமாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக, 69 ரூபாய் கட்டணம், 70 ரூபாயாக மாற்றியமைக்கப்படுகிறது; 62 ரூபாய் கட்டணம், 60 ரூபாயாக வசூலிக்கப்படும். அதுபோலவே, அருகருகே உள்ள, இரண்டு, மூன்று சுங்கச்சாவடிகளை ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் கட்டணம் வசூல் செய்யவும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 4 தபால் ஊழியர்களின் 1.5 கோடி சொத்து முடக்கம்: ஐதராபாத்: ஆந்திராவில் தபால் அலுவலக சேமிப்பு பணத்தை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 4 தபால் ஊழியர்களின் 1.50 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.