பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit

பாஜக தலைவர் அமித் ஷா அகமதாபாத்தில் நடைபெற்ற லக்‌ஷய ஜித்தோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் பற்றி அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ கடந்த 5 ஆண்டுகள் கால பாஜக ஆட்சியில் தீவிரவாத அமைப்புகள் மீது 2 முறை மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் தைரியமாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த முடியாது என அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர். தற்போது என்ன நடந்தது .. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், புல்வாமா தாக்குதல் நடந்த 13 நாட்களிலேயே தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர் “ எனக் பேசினார்.

கடந்த மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோல் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதாலும், அதற்கான ஆதாரம் இல்லை என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.