நியூயார்க்:

ஐநா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இது குறித்து நடந்த மாநாட்டின் தலைவரான கோமேஸ் “அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்திருக்கிறோம். இனால் எங்கள் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது”  என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த சட்ட நெறிமுறைக்காக உலகம் 70 வருடங்களாக காத்திருந்தது. உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததது.

ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டப் போது 13 வயது ஆகியிருந்த செட்சுகோ துர்லோ என்பவர் இன்னொரு முறை எந்தவொரு மனிதரும் அத்தகைய அட்டூழியத்திற்கு ஆளாகக்கூடாது என்று வாழ்நாள் முழுதும் உழைத்தார்” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்பட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா,  இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள் ஆதரிக்கவில்லை. அவற்றின் கூட்டணி நாடுகளும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.