ஜோகன்னஸ்பர்க்: தென்கிழக்கு ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கை தாக்கியப் புயலால், 1000க்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து கூறப்படுவதாவது, “இடாய் எனும் பெயர்கொண்ட அந்தப் புயல், 3 கோடி மக்கள்தொகை கொண்ட மொசாம்பிக் நாட்டை தாக்கியுள்ளதானது, கடந்த தலைமுறைகளில் நிகழாத ஒன்று.

இதை, ‘பெரியளவில் நிகழ்ந்துள்ள மோசமான பேரிடர்’ என்று அந்நாட்டின் அதிபர் ஃபிலிப் நியூசி கருத்து தெரிவித்துள்ளார்.

இப்புயல், முதலில் இந்தியப் பெருங்கடல் துறைமுக நகரமான பெய்ராவைத்தான் தாக்கியது. பின்னர், ஜிம்பாப்வே மற்றும் மாலவி நாடுகளுக்குள் சென்று, பெருங்காற்றையும் மழையையும் உருவாக்கியது. ஆனால், அடுத்த சில நாட்களில், அதன் தன்மை மாறி, மொசாம்பிக் நாட்டிற்குள் புகுந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டது.

ஏராளமான கிராமங்களை நீரில் மூழ்கடித்து, பிணங்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு, பேயாட்டம் ஆடிவிட்டது அந்த இடாய் புயல். இந்தப் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் மேலிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஊழலில் மூழ்கியுள்ள அந்நாட்டின் திறமையற்ற நிர்வாகம், இந்தப் பேரிடரை எப்படி கையாளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

– மதுரை மாயாண்டி