துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்டின் கடல் பிரதேசத்தில் 22 கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் துபாய் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோடை காலத்தில் கப்பல்களில் மாட்டிக்கொண்டதாக கதறும் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் உயர்ந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா தவிர அண்டை நாடுகளாக இலங்கை, மியான்மார், பாகிஸ்தானின் மாலுமிகளும் சிக்கலில் இருப்பதாகவும், இதே போல பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் சிக்கலில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சம்பளம் தராதது, உணவு மற்றும் தண்ணீர் வசதியின்மை, கடும் வெப்பம் ஆகியவற்றோடு போராடும் மாலுமிகள் தங்களை பணி முடிப்பு செய்து சொந்த ஊருக்கு அனுப்பும்படியும் வேண்டி வருகின்றனர். பல முதலாளிகள் மாதக்கணக்கில் சம்பளம் தரவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களில் 36 மாலுமிகளை 6 கப்பல்களிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஒரு சிலர் விஷயத்தில் தூதரகம் உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. நாங்கள் மட்டுமே அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முடியாது குறிப்பாக அவர்களது சம்பளம் பற்றிய விவகாரங்களை தீர்க்க முடியாது என்கின்றனர் அதிகாரிகள்.
மாலுமிகள் நன்கு விசாரித்துவிட்டு கப்பல் வேலைக்கு சேரும்படியும் அவர் கோருகிறார். சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மாலுமிகளுக்காக செயல்படும் கிரீஷ் பந்த் எனும் சமூக ஆர்வலர் கூறுகையில், “ தவறிழைக்கும் நிறுவனங்கள், முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார். ஏனெனில் நாளுக்குநாள் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளன என்கிறார் அவர். கப்பலில் ஜென்ரேட்டர் இயக்க எரிபொருள் இல்லாமல் கூட அவர்கள் துன்பப்படுகின்றனர்’’ என்றும் அவர் விவரித்தார்.
இரண்டு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டதையும் அதில் வேலை செய்த மாலுமிகள் கடற்கரைகளில் ஒதுங்கியதையும் சுட்டிக்காட்டும் அவர், தூதரகம் அவர்களை தாய்நாட்டிற்கு அனுப்ப உதவி செய்ததையும் கூறினார். இதில் பெரிய சோகம் என்னவென்றால் தீ விபத்து நடந்த கப்பல் குஜராத்தி ஒருவருக்கு சொந்தமானது. கடைசியில் அந்த உரிமையாளர் மாலுமிகளின் பயணக்கட்டணத்தில் ஒரு பகுதியை வழங்க ஒப்புக்கொண்டார்.
தூதரகம் மீதிப்பணத்தை செலுத்தியது. மேலும் நெருக்கடி கால வெளியேற்ற சான்றிதழையும் பெற்றுத்தந்தது என்கிறார். கடந்த மே 13 ஆம் தேதி ஒரு கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கிய ஐந்து மாலுமிகளின் நிலையையும் தூதரகம் கவனித்து வருகிறது. இந்த விபத்தில் ஒரு இந்திய மாலுமி இறந்தும் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.