பெங்களூரு: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பெங்களூரு நகரம் முழுவதும் 16,000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு விளக்குகள் மற்றும் அவசர பொத்தான்களை நிறுவும் திட்டத்திற்கு, கர்நாடக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பான நகரத் திட்டத்தை பெங்களூரில் ரூ .667 கோடியில் செயல்படுத்த நிர்பயா நிதியத்தின் கீழ் முன்மொழியப்பட்டது. இது மூன்று ஆண்டு காலத்தில் நிறைவடையும். திட்டத்தின் செலவு 40-60 என்ற விகிதத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த முடிவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜே.சி.மதுசாமி, இந்த கேமராக்களின் இருப்பிடம் பெங்களூரு காவல்துறையினரால் குற்றங்கள் நடைபெறும் இடங்களின் ஜி.எஸ். மேப்பிங் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

ஒவ்வொரு சி.சி.டி.வி யிலும் அவசர விளக்கு மற்றும் பீதி பொத்தானைக் கொண்டிருக்கும், இது அழுத்தும் போது உரத்த சைரனை வெளியிடும் மற்றும் அருகிலுள்ள போலீஸை எச்சரிக்கும் என்றார்.

மொத்தம் 16000 கேமராக்களில், 7500 பகல்நேர கண்காணிப்பு கேமராக்கள், 5000 நிலையான கேமராக்கள், 1000 பான் டில்ட் ஜூம் கேமராக்கள், 1000 தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் கேமராக்கள், 20 ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 1300 உடலில் அணிந்து கொள்ளும் கேமராக்கள் ஆகியவை அடங்கும் என்று பி.டி.ஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

நிர்பயா நிதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தவிர, டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ போன்ற நகரங்களும் இந்தத் திட்டத்தின் ஒரு அம்சமாக இருக்கின்றன.