சென்னை: பிப்ரவரி  மாத இறுதிக்குள் சென்னையில், மேலும்  245 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்  என  மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, டீசல் பேருந்துகளுக்கு பதிலாக சிஎன்ஜி மற்றும் மின்சார பேருந்துகளை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி பல பகுதிகளில் டீசல் என்ஜின்கள் சிஎன்ஜி என்ஜின்களாக  மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் சென்னையில் மின்சார பேருந்துகளை அதிக அளவில் இயக்கி வருகிறது.

மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) நச்சுப் புகையை வெளியேற்றாததால் காற்று மாசுபடுவதைக் குறைத்து, நகர்ப்புற காற்றுத் தரத்தை மேம்படுத்துகின்றன. குறைந்த சத்தத்துடன் இயங்குவதால் இரைச்சல் மாசுபாடு குறைகிறது. டீசல் வாகனங்களை விட எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவு குறைவு, நீண்ட காலப் பயன்பாட்டிற்குச் சிறந்தவை என்பதால் மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக  சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில்,  625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இதில் 380 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த 2025 ஜூன் மாதம் சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து  மின்சார பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. இதைத தொடா்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.  மீதமுள்ள 245 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து  கூறிய மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ,  மீதமுள்ள 245 மின்சார பேருந்துகள் தயாரிப்பதற்கான பணிகள் முடிந்த பிறகு, விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் 145 பேருந்துகள் பல்லவன் இல்லம் பணிமனை, 100 பேருந்துகள் தண்டையாா் பேட்டை பணிமனையுடன் இணைக்கப்படும். 2-ஆவது கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது என்றனா்.
[youtube-feed feed=1]