சென்னை: சென்னையில் மேலும்127 புதிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில்  மேயர் பிரியா அறிவித்தார். மேலும்,  பள்ளி வளாக தூய்மைப் பணிகளில் சுய உதவிக்குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது அத்துடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பள்ளிகளை நவீனமயமாக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது..

சென்னை மாநர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில்  மாமன்ற உறுப்பினிர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில்கூறினார். பின்னர், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதன் விவரம் வருமாறு:-

தனியார் பள்ளிகளுக்கு இணையாக இலவசக் கல்வியை வழங்குவதற்காக சென்னையில் 211 மழலையர் பள்ளிகளை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்தநிலையில் புதிதாக 127 மழலையர் பள்ளிகளை சென்னை மாநகராட்சி திறக்க உள்ளது. போரூர், பெருங்குடி, ஆலந்தூர், உத்தண்டி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர், வாணுவம்பேட்டை, நங்கநல்லூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியன்பேட்டை, நாராயணபுரம், புழுதிவாக்கம், நெற்குன்றம், முகப்பேர், நொளம்பூர், பழவந்தாங்கல், பட்டரவாக்கம், கொரட்டூர், புழல், சூரப்பேட்டை, மணலி, மாத்தூர், எர்ணாவூர், திருவொற்றியூர், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம் மற்றும் கத்திவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகங்களிலும், நடுநிலைப்பள்ளி வளாகங்களிலும் இந்த மழலையர் பள்ளிகள் நிறுவப்படும்.

இந்த புதிய பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மழலையர்  பள்ளிகளில் மொத்தம் 254 ஆசிரியர்களும், 127 குழந்தை பராமரிப்பு உதவியாளர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில், பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் முயற்சியாக, 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 118 பள்ளிகளுக்கு கணினி உதவியாளர்கள் பணியமர்த்தப்படு வார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், புவியியல், புள்ளியியல், கணினி அறிவியல், தணிக்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 இது சென்னை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகுத்தது. பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனமான ஏஜென்சி பிராஞ்சைஸ் டி டெவலப்மெண்ட் (Agence Française de Développement) மற்றும் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் ஏற்கனவே பல பள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் நவீனமயமாக்கலுக்கு பிரெஞ்சு ஏஜென்சியின் பங்களிப்பு 80% இருக்கும். ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், சென்னை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்குத் தேவையான நிதியில் 20% பங்களித்துள்ளது.

அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சி ₹1.65 கோடி செலவில் நவீன பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 1.75 கி.மீ தூரத்திற்கு நடைபாதை, இருக்கைகள், வாலிபால், பேட்மிண்டன், பாஸ்கெட் பால் போன்ற விளை யாட்டு திடல்கள், சிறுவர் களுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் மழை நீர் சேமிப்பு குளம், அழகு செடிகள் ஆகியவற்றுடன் கூடிய நவீன வடிவிலான பிரமாண்ட பூங்கா அமைக் கும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டு முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றது.

கூட்டத்தின் இறுதியில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேயர் பிரியா நிறைவேற்றினார்.

குறிப்பாக, நிறுத்தி வைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான செலவீனங்கள், சாலை உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பாக்கி பணத்தை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும் எனக் கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, கடந்த 2023 டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த கார் பந்தயத்துக்காக கூடுதல் தரமான சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.6 கோடியைத் தாண்டி கூடுதலாக ரூ.9.65 கோடி செலவானது. கார் பந்தயம் நடத்துவதற்காக மொத்தமாக ரூ. 15.65 கோடி செலவிடப்பட்டது. இந்த கூடுதல் செலவு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை கொடுக்கவேண்டும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு ரூ.8.25 கோடியை தமிழ்நாடு அரசு விடுவிக்கவேண்டும், என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்த டிச.9,10 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனிடையே, டிசம்பரில் ஏற்பட்ட மி்க்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக பார்முலா-4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பந்தயத்தை சென்னை மாநகருக்குள் நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதனால் தமிழக அரசுக்கு எந்தவொரு வருவாயும் இல்லை. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடியை செலவு செய்திருப்பது தவறு. பந்தயம் நடக்கும் பகுதியில் அரசு பன்னோக்கு மருத்துவமனை உள்ளதால் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும், எனவே, இந்த கார் பந்தயத்தை சென்னைக்குள் நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு மனுவில் கோரப்பட்டிருந்தது

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது. ஆனால் மாநில அரசு செய்த செலவினங்களை திருப்பிச் செலுத்துவது போன்ற சில நிபந்தனைகளை விதித்தது.

மாநில அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய வசதிகள் மற்றும் ஏற்பாடுகளைத் தவிர RPPL எதையும் எதிர்பார்க்க முடியாது. நிகழ்ச்சிக்கான செலவை RPPL மட்டுமே ஏற்க வேண்டும், என்று உயர் நீதிமன்றம் கூறியது.

இதனிடையே ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் சர்கியூட் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு செய்த ரூ.42  கோடி செலவை ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (RPPL)  திருப்பிச் செலுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 19 அன்று பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஆர்பிபிஎல் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் நய்யாரின் வாதத்திற்குப் பிறகு இடைக்காலத் தடை விதித்தனர்.

மேலும் இந்த மேல்முறையீட்டு மனு ஜூலை 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.