நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை (எக்ஸ்) பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு மாதாந்திர  கட்டணம் வசூலிக்க அதன் நிறுவனர்  எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த திங்களன்று ( செப்டம்பர் 18ந்தேதி) ஒரு லைவ்ஸ்ட்ரீமில் பேசிய மஸ்க், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், தனது மைக்ரோ பிளாக்கிங் தளம் “சிறிய மாதாந்திர கட்டண முறைக்கு நகர்கிறது” என்று  தெரிவித்தார். தனது தளம் போட்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிவித்துள்ளதுடன், போலி பயனர்களை ஒழிக்க கட்டண முறைக்கு மாற்ற இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

 

டிவிட்டர் சமூக வலைதளத்தை வாங்கியது முதல் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.  ஊழியர்கள் குறைப்பு, பணம் கொடுத்து பிரிமியம் அக்fவுண்ட், புளு டிக்  மாற்றம் என  பல மாற்றங்களை செய்ததுடன், சமீபத்தில் டிவிட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்றி அறிவித்தார்.

இந்த நிலையில், இனிமேல், எக்ஸ் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களிடமிருந்தும் மாதாந்திர கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளார்.

தற்போது  அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எதன் யாகுவை எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார். அப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து இருவரும் விவாதித்ததாகவும்,  தொடர்ந்து,  கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே எக்ஸ் தளத்தில் சமநிலையை ஏற்படுத்துமாறு மஸ்க்கை எதன் யாகு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதில் கூறிய எலன் மஸ்க், இதுபோன்ற சர்ச்சைகளுக்கு போலி பயனர்களின்  நடமாட்டமே காரணம் என்று குற்றம் சாட்டிய மஸ்க், இதனை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எக்ஸ் இணையதளத்திற்கு ஒரு கட்டண சுவரை அமைப்பதன் மூலம் தான் போலி கணக்குகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக தெரிவித்துள்ள  மஸ்க் , தற்போது பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் 100% கட்டண வலைதளமான மாற்ற மஸ்க் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.