டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ந் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற முதல் அமர்வு பிப்ரவைரி 12ந்தேதி முடிந்தது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் குறித்த அமர்வு மார்ச் 8ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8ந்தேதி முடிய இருந்தது. ஆனால் தமிழ்நாடு உங்ளபட 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக நாடாளுமன்ற அமர்வு மார்ச் 25ந் தேதியே முடித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கமான மழைக்காலக் கூட்டத்தொடருக்கான அமர்வு ஜூலை 19ந் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்துக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தொடரின் கொரோனா 2வது அலையில் ஏற்பட்ட பேரிழப்பு, கொரோனா 3வது அலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.