மதுரை: புதுக்கோட்டை பகுதியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதால், அவரது மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கம்மை தொற்று பரவி வருவதால், தமிழ்நாட்டில் தொற்று பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக எல்லையோர மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளன. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி தென்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களது மாதிரிகள் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டை வந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது நகர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவில், அவருக்கு குரங்கம்மை தொற்று நோய்க்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து இளைஞரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புனே ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான் குரங்கம்மைநோய் தொற்று பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும்.