க்ரா

க்ரா நகரில் வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்றவரிடம் இருந்த பணத்தை குரங்கு ஒன்று பறித்துச் சென்றுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் தைமண்டி என ஒரு பகுதி உள்ளது.    அங்கு விஜய் பன்சால் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்துள்ளார்.    அவர் நேற்று முன் தினம் அந்தப் பகுதியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு தன் மகளுடன் சென்றுள்ளார்.    அங்கு ரூ. 2 லட்சம் பணத்தை தன் கணக்கில் இருந்து எடுத்துள்ளார்.

எடுத்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தன் மகள் நான்சியிடம் விஜய் பன்சால் கொடுத்துள்ளார்.  இருவரும் வங்கியில் இருந்து  வெளியே வந்தனர்.   அவர்களை திடீரென சில குரங்குகள் சூழ்ந்து தாக்க முயன்றுள்ளன.   அப்போது ஒரு குரங்கு நான்சி வைத்திருந்த ரூ.2 லட்சம் உள்ள பையை பறித்துக் கொண்டு ஓடி விட்டது.

விஜய் பன்சால் மற்றும் வங்கி ஊழியர்கள் சிலரும் அந்த குரங்கை துரத்திச் சென்றுள்ளனர்.   அந்த பகுதி மக்களும் அவர்களுடன் சேர்ந்து குரங்கை துரத்தி உள்ளனர்.  குரங்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் உச்சியில் பணப்பையுடன் அமர்ந்துக் கொண்டது.   உணவுப் பொருட்களை காட்டி அந்த பையை வாங்க பலர் முயற்சி செய்தனர்.

அப்போது அந்த குரங்கு பையைத் திறந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து கிழித்து கிழே எறிய ஆரம்பித்தது.    சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை இவ்வாறு வீசியது.   அதன் பிறகு மீதிப் பணத்துடன் ஓடிய குரங்கை யாராலும் பிடிக்க முடியவில்லை.

வீசி எறியப்பட்ட ரூ. 60 ஆயிரத்தை விஜய் பன்சால் எடுத்துக் கொண்டு மீதம் உள்ள ரூ.1,40,000 குறித்து காவல்துறையிடம்  புகார் அளித்துள்ளார்.   காவல்துறையினர் எந்த பிரிவின் கீழ் குரங்கின் மீது வழக்கு தொடுப்பது எனத் தெரியாததால் கடும் குழப்பத்தில் உள்ளனர்.   இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் விஜய் பன்சால் புகார் அளித்துள்ளார்.