உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள பகவந்தீன் என்ற விவசாயி, தனது மகனின் மருத்துச் செலவுக்காக பூர்வீக நிலத்தை விற்க முடிவு செய்தார்.
இதற்காக அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று பத்திரப்பதிவு செய்து விட்டு, நிலத்தை வாங்கியவர் கொடுத்த 4 லட்சம் ரூபாயை அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தார்.
அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு விசுக்கென்று கீழே இறங்கி பகவந்தீன் மடியில் வைத்திருந்த ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை பறித்து சென்றது.
மரத்தின் உச்சிக்கு சென்ற அந்த குரங்கு ஒவ்வொரு நோட்டாக கிழித்தெறிய ஆரம்பித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பணப்பறிப்பால், செய்வதறியாது திகைத்த விவசாயி கூச்சல் போட்டு ஊரை கூட்டினார். அங்கு நின்ற சிலர் குரங்கை நோக்கி பழம், பொறி உள்ளிட்ட தின்பண்டங்களை வீசியதால், பணத்தை கீழே போட்டு விட்டு, பழத்தை எடுத்து கொண்டது, அந்த குரங்கு.
கிழித்து எறிந்ததில் 14 நோட்டுகள் (7 ஆயிரம் ரூபாய்) சேதம் ஆனாலும் மிச்ச பணம் கிடைத்ததால் விவசாயி நிம்மதியாக வீடு போய் சேர்ந்தார்.
– பா. பாரதி