கரூர்: திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அவர்மீதான குண்டாஸ் சட்டத்தில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், மேலும் சில வழக்குகளில் நீதிமன்றம் சவுக்குக்கு ஜாமின் வழங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
பண மோசடி வழக்கு விவரம்:
கரூர், காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடிபில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கள் யூடியூபில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசைவார்த்தை கூறியதால், கிருஷ்ணன் தனது மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஷ்வரனிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர முடியாது என கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.
அதன்படி, விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்த யூடியூப் நிறுவனத்தின் உரிமையாளர் சவுக்கு சங்கரை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த 9ஆம் தேதி கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது காவல்துறையினரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை முடிந்து இரண்டாவது முறையாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் ஏழு வழக்குகள் உள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் ஏற்கனவே பல வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமின்! எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி
சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமின்! எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி