டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் தீயில் கருகிய சம்பவம் மாநிலங்களவையில் இன்று எதிரொலித்தது.
இதில், முறையான விசாரணை வேண்டும் என்றும் நீதிபதி யஸ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக 44 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரிடம் வழங்கப்பட்டது.
முன்னதாக, மார்ச் 14ம் தேதி இரவு 11:30 மணியளவில் நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் அறையில் தீ ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது.
இரண்டு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த அறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அப்போது அந்த அறையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தீ விபத்தின் போது நீதிபதி வர்மா வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
இருந்தபோதும், இந்த விவகாரம் வெளியில் கசிந்ததை அடுத்து நீதிபதி வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கூடிய கொலிஜியம் தீ விபத்து தொடர்பான வீடியோ பதிவுகளை பார்த்து அங்கிருந்த கட்டுக்கட்டான பணத்தைப் பார்த்து திகைத்தனர்.
இது தொடர்பாக நீதிபதி வர்மா-விடம் இருந்து உரிய விளக்கமும் இல்லாததை அடுத்து அவரை அலகாபாத் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிபதி ஒருவர் தனது வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருந்த விவகாரம் நீதித்துறைக்கே அவமானகரமான செயல் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதி மீது முறையான விசாரணை நடத்தி அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று மாநிலங்களைவையில் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை சார்ந்த அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.