கன்னட சினிமா உலகில் இளம் நடிகர்கள் போதை மருந்து உட்கொள்வதாக பிரபல இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி தும்கூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், தான் ஆட்சியில் இருந்தபோது போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார்.
இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இலங்கைக்கு தப்பி ஓடியதாக தெரிவித்த அவர், ’’இப்போது கர்நாடகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
’’ போதைப்பொருள் கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், மதுக்கூட நடன விடுதிகள் மூலம் சம்பாதித்த பணத்தால், எனது கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது’’ என்ற திடுக்கிடும் தகவலையும் குமாரசாமி வெளியிட்டார்.
வெளிநாடுகளில் பல்வேறு அரசுகளை போதைப்பொருள் கடத்தல் கும்பல் கவிழச்செய்ததாக, அவ்வப்போது புகார்கள் எழும்.
இந்த நிலையில், கர்நாடக அரசை, போதைப்பொருள் கடத்தல் காரர்கள் கவிழ்த்தனர் என முன்னாள் முதல்-அமைச்சரே குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி.