‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் கர்ணன் வெளியாகும் என அறிவித்தது.
கர்ணன் படத்தின் முதல் பாடலான கண்டா வர சொல்லுங்க” பாடல் வெளியாகியது. இந்த பாடலை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி. கண்டா வரச் சொல்லுங்க பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
யூடியூப் தளத்தில் அதிகப் பார்வைகள் பெற்ற இப்பாடல், வெளியான முதல் 10 நாள்களிலேயே 1 கோடி பார்வைகளைப் (10 மில்லியன்) பெற்றுள்ளது.
இந்தப் பாடல், கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு சந்தோஷ் நாராயணன் திரையிசை வாழ்விலும் ஒரு திருப்புமுனைப் பாடலாகவும் அமைந்துள்ளது.
இதை தொடர்ந்து கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் வெளியாகியது. யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை தேவா, ரீத்தா பாடியுள்ளார்கள்.
இந்தப் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.
அதில், “அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை, நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும், எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான், சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும் தான், நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.
பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து, காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது, புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக, இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன… பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…
காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் மார்ச் 31 நடைபெற்றது. ஹாலிவுட் படத்துக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அவரைத் தவிர்த்து இதர அனைத்துப் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாடல் கர்ணனின் யுத்தமான உட்றாதீங்க எப்போவ் பாடல் வீடியோ வெளியானது. தீ பாடிய இந்த பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.
தற்போது இந்த படத்திற்கு தணிக்கையில் சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.