கோலாலம்பூர்

மலேசியப் பிரதமராக மொகிதீன் யாசின் அந்நாட்டு மன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார்.

மலேசியப் பிரதமராக பதவி வகித்து வந்த மகாதீர் முகமதுவுக்கும் அவரது கூட்டணி கட்சி தலைவரான அன்வருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.  இதனால் பெரும்பான்மை இழந்த மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார்.  மலேசிய மன்னர் அவரது ராஜினாமாவை ஏற்று இடைக்கால பிரதமராக நியமித்தார்.

அடுத்த பிரதமர் யார் என கடும் யூகம் எழுந்தது.  மகாதீரின் முன்னாள் கூட்டணிக கட்சித் தலைவரான அன்வர் பதவி ஏற்பார் என கூறப்பட்டது.  அதே வேளையில் அன்வர் மற்றும் மகாதீர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அதனால் மகாதீர் மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் மற்றொரு தகவல் வந்தது.

இந்நிலையில் நேற்று மொகிதீன் யாசின் பிரதமர் பதவி ஏற்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.  இன்று மொகிதீன் யாசின் மன்னர் முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றார்.    இந்த பதவி ஏற்பு விழாவில் அம்னோ தலைவர் அகமது சாகித் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்த மகாதீர் முகமது இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ளவில்லை.

படம் உதவி : malaysiakini.com