பீஜிங்:

சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் வரும் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது.

ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று சீனா புறப்பட்டு சென்றார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை இன்று சந்தித்து டோக்லாம் உள்ளிட்ட எல்லை பிரச்சனை குறித்து பேசினார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுஷ்மாவுடன், வாங் யி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இருநாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட தலைவர்கள் மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி சீனா வருகிறார்.

சீன அதிபர் க்சி ஜின்பிங்-கை சந்தித்து சர்வதேச பிரச்சனைகள் மற்றும் இந்தியா&-சீனா இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பார்’’ என்றார்.