டெஹ்ராடூன்:
பிரதமர் மோடி தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேதார்நாத் தியான குகைக்கு பிரதமர் மோடி வந்து சென்றபிறகு, மிகவும் பிரபல்யமாகிவிட்டது.
ஜுலை மாதம் முழுவதும் இந்த குகைக்கு வருவதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரை பல்வேறு தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள், இணையத்தில் சென்று தியானக் குகையில் தியானம் இருப்பதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இமயமலையில் 12,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் தியானக் குகை போல், மேலும் குகைகள் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தியானம் செய்த குகையிலேயே தியானம் செய்ய பக்தர்கள் விரும்புகின்றனர்.
காவி உடையில் கேதார்நாத் குகையில் பிரதமர் மோடி தியானம் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது. மோடி வந்து சென்றபிறகு, இதுவரை 7 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இதனையடுத்து, சீர்குலைந்துபோன கேதார்நாத்தை மறுசீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வந்தார். பிரதமரின் நேரடி கண்காணிப்பின் பேரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.