டில்லி:

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, லட்சத்தீவு பயணம் மேற்கொண்டது குறித்து டில்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி அபாண்டமாக பேசிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது. அப்போதைய லட்சத்தீவு கவர்னர் மற்றும், ஐஎன்ஸ் விராட் போர்க்கப்பலின் துணைகேப்டனும், மோடி கூறிய தகவல் பொய் என்பதை அம்பலப்படுத்தி உள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் மோடியின் புளுகு 8 மணி நேரத்திலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது குடும்பத்தார், ‘ஐஎன்எஸ் விராட்’ எனப்படும், இந்திய கடற்படை விமானம் தாங்கி போர்க் கப்பலை, விடுமுறையை கழிக்க பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி டில்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மோடியின்  குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று, அப்போதைய ஐஎன்எஸ் போர்க் கப்பலின்  துணை தளபதியாக (வைஸ் அட்மிரல்) பணியாற்றிய வினோத் பச்சாரியா மறுத்துள்ளார். அதுபோல,மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வாஜ்ஹத் அபிபுல்லாவும் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தபோது  1987ஆம் ஆண்டு கடலோர பாதுகாப்புக்காக பயன்படுத்தப் பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான  ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது, அவருன் மனைவி சோனியாகாந்தி உள்பட குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டனர்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியில், மீண்டும் அரியணை ஏற மாட்டோம் என்ற தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள்  எதிர்க்கட்சிகளை பற்றியும், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் குடும்பத்தினர் குறித்தும் உண்மைக்கு புறம்பாக பிதற்றி வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீராத வேட்கையில் ராகுல் காந்தியின் குடும்பத்தின்மீதும்  தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறார். தோல்வி பயம் காரணமாக சமீப காலமாக  மக்கள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த, ‘மிஸ்டர் கிளின்’  என்று புகழுரைக்கப்பட்ட மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான  ராஜீவ்காந்தி குறித்து அவதூறாக பேசி அவரது மாண்புக்கு இழுக்கை தேடி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று டில்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத் தில் பேசிய பிரதமர் மோடி, உச்சக்கட்டமாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது சேற்றை வாரி வீசியுள்ளார்.

அவர் பேசும்போது, ராஜீவ் பிரதராக இருந்தபோது, இந்திய போர்க்கப்பலான விராட், அவரின் விடுமுறையை கழிப்பதற்காக 10 நாட்கள்  அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்கள் போர்க்கப்பலை டாக்சி போன்று பயன்படுத்தினர் என்று கூறிய மோடி,  இந்த பயணத்தின் போது, ராஜீவ் காந்தி தனது மனைவிவழி உறவினர்களையும் அந்த கப்பலில் அழைத்துச் சென்றார். அவர்கள் அனைவருமே இத்தாலி நாட்டு குடிமக்கள். இந்தியப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட், உட்பகுதிக்குள் வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட வரலாறு  கிடையாது என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறினார்.

மோடியின் இந்த தவறான தகவல் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அப்போதை விராட் கப்பலின் துணைகேப்டனாக இருந்த வினோத் பச்சாரியா  மோடியின்  குற்றச்சாட்டு உண்மை இல்லை  மறுத்துள்ளார்.

மோடி கூறியது முற்றிலும் தவறானது என்றும்,  ராஜீவ் காந்தி அப்போது பயணம் செய்தது அரசு ரீதியிலான பயணம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், அவருடன் குழுவினர் யாரும் வரவில்லை என்று கூறியவர், போர்க்கப்பலின் உள்பகுதியில் யாரையும் அனுமதிக்கவில்லை, அவர்கள் தங்களது இடத்திலேயே இருந்தனர் என்று விளக்கியுள்ளனர்.

தற்போது தேர்தலுக்காக  விவகாரத்தை அவர்கள் மிகவும் பெரிது படுத்தி உள்ளனர், மோடி கூறிய தகவல் அனைத்தும் தவறானது என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதுபோல, அப்போதைய லட்சத்தீவுகளின் கவர்னரும் ஓய்வுபெற்ற மத்திய தகவல் ஆணைய தலைவர், வாஜ்ஹத் அபிபுல்லா பிரதமர் மோடி பேசியிருப்பது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்துஉள்ளார்.

ராஜீவ்காந்தியின் 1987ம் ஆண்டு லட்சத்தீவுகள் பயணத்தின்போது, தான் அங்கு கவர்னராக பணியாற்றி வந்ததாகவும்,  அரசுமுறை பயணமாகவே ராஜீவ்காந்தி அங்கு வந்தார், அவருடன் அமைச்சர்கள் நரசிம்ம ராவ் உள்பட சில அதிகாரிகளும் வந்ததாக தெரிவித்து உள்ளார்.

அப்போது, லட்சத்தீவுகள் அபிவிருத்தி கவுன்சில் ராஜீவ்காந்தியால் திறக்கப்பட்டதுடன், அதன் முதல் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், லட்சத்தீவுகளில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை அமைக்கும் வகையில் அப்போதைய அமைச்சர் நரசிம்ம ராவ் உள்பட  மொத்த அமைச்சரவையும் வந்திருந்ததாகவும் தெரிவித்து உள்ளார். அந்த குழுவினருடன் முக்கிய மாக, ராஜீவின் நண்பர்கள் யாரும் வரவில்லை என்றும் கூறி உள்ளார்.

டில்லியில் பணியாற்றி வந்த நான்,  1987ம் ஆண்டு ஆகஸ்ட் 1ந்தேதிபிரதமரின் அலுவலகத்தை விட்டு வெளியேறி லட்சத்தீவுகளின் கவர்னராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள  ஹபிபுல்லா,  நிர்வாகி என்ற முறையில், நான் கவரடியில் தீவு அபிவிருத்தி அதிகார சபை கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது என்றும் தெளிவு படுத்தி உள்ளார்.

ஆனால், அப்போதைய நிகழ்வுகளை பிரதமர் மோடி ஏன் திரித்து கூறி பொய் சொல்கிறார் என்பது விசித்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளவர், அப்போது தீவின் நிர்வாகியாக நான் இருந்தேன். இது தொடர்பான ஆவணங்களை சரி பார்க்க முடியும் என்றும், அவருக்கு யாரோ தவறான தகவல்களை அளித்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக மோடியின் அண்டப்புளுகு அம்பலமாகி உள்ளது.

பொதுவாக தமிழில் பொய் பேசுபவர்களை  அண்டப்புளுகன் ஆகாசப் புளுகன் என்று குறிப்பிடுவது வழக்கம். அதுபோலவே பிரதமர் மோடி கடந்த தேர்தலின்போது பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற எண்ணத்தில், முன்னாள் மறைந்த பிரதமர் குறித்து பொய்யான தகவல்களை பேசி மக்களிடையே மேலும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் என்பதுதான் உண்மை..

மோடியின் பொய் தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகள்…