டெல்லி:  பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட பணிகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலை வாய்ப்பு பற்றிய ‘வெற்று’ கனவுகள் போன்றவையே இடம் பெற்றுள்ளது,  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

5மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவடைந்ததும்,  கடந்த 10 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக, ரஷ்யா, உக்ரைன் போர் என்று மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், தற்போது கச்சா எண்ணை விலை குறைந்துள்ளதால்  எரிபொருட்கள் விலையும் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மோடி அரசு அதை கண்டுகொள்ளாமல் தினசரி பெட்ரோல் விலை உயர்வுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார். இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விலைவாசிகளும் உயர்ந்து வருவதால், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட வேலைகளில் ஒன்றாக, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது, விவசாயிகளின் கனவுகளை சிதைப்பது , வேலை வாய்ப்பு தொடர்பாக இளைஞர்களுக்கு வெற்று உறுதிமொழிகளைத் தருவது ஆகியவை உள்ளது.

 மக்களை எப்படி செயலிழக்கச் செய்வது என்று யோசிக்கிறார். இளைஞர்களுக்கு எப்படி வெற்று வாக்குறுதிகளை அளிக்கலாம் என்று யோசிக்கிறார். எந்த அரசு நிறுவனத்தை விற்கலாம், விவசாயிகளை எப்படி மேலும் ஆதரவற்றவர்களாக ஆக்குவது? என்பவையே இடம் பெற்றுள்ளது” என  கூறியுள்ளார்.