பெங்களூரு:
கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வரும் பாரதியஜனதா, கர்நாடகா இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தது.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், இந்த இடைத்தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டு தொகுதிகளிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. இது பாரதியஜனதாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கர்நாடக மக்களின் நாடி துடிப்பை உணர்ந்து ஆட்சி செய்து வருகிறேன். எனது செயல்பாட்டிற்கு இடைத்தேர்தலில் மக்கள் நல்ல மதிப்பெண் கொடுத்துள்ளதின் மூலம் என்னை அவர்கள் கை விடாமல் காப்பாற்றி யுள்ளனர் என்றார்.
பாரதிய கட்சியினர் கூறுவதுபோல, கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை என்றும், இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும், அடுத்த ஆண்டு நடைபெற பொதுத்தேர்தலுக்கு முன்னுதாரணம் கிடையாது என்றார்.
எங்களது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் செய்துள்ள சாதனைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி பொதுத்தேர்தலில் வாக்காளர்களை சந்திப்போம் என்றார்.
நாட்டில் பிற மாநிலங்களில் மோடி அலை இருக்கலாம், கர்நாடகாவில் மோடி என்ற பேச்சுக்கு இடமில்லை. பிரதமர் நல்லவராக இருந்தாலும், மாநிலத்தில் பாஜவை வழி நடத்துபவர்கள் ஊழல் கறை படிந்தவர்கள். அவர்களை நம்பி வாக்களிக்க மக்கள் தயாரில்லை என்பதை இடைத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மாநில முதல்வராக மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில் எடியூரப்பா உள்ளார். அவரின் ஆசை கண்டிப்பாக நிராசையாகும். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. எதார்த்தமான உண்மையை சொல்கிறேன்.
நஞ்சன்கூடு மற்றும் குண்டல்பேட்டை வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.