டில்லி:
டில்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘விவசாயிகள் வருமானம் 6 ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று மோடி கூறினார். இது போன்ற மயக்கம் தரும் வார்த்தைக்கள் ஒருபோதும் செயல்பாட்டுக்கு வராது. பாஜக அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு பொருளாதாரத்தை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிட்டது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான நடவடிக்கையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரழிவை உண்டாக்கிய பணமதிப்பிழப்பு, அவசரமான ஜிஎஸ்டி விதிப்பு முறையும் சேர்ந்து சிறுதொழில்களை நசுக்கிவிட்டது. பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைத்தும் மாயஜால வார்த்தைகளாகவே இன்று வரை உள்ளது’’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில், ‘‘ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆண்டுக்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட பார்க்க முடியவில்லை. காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் அரசு எளிதாகவும், உணர்வுப்பூர்வமாகக் கையாண்டது. ஆனால் தற்போதைய அரசு தவறான முறையில் கையாண்டு வருகிறது. இனால் தினமும் நிலைமை மோசமடைந்து வருகிறது.
எல்லைகள் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. எல்லை மீறிய தாக்குதல்கள், தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகரித்துவிட்டன. இந்தியா தற்போது முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி நாட்டின் எதிர்காலத்துக்கு புதிய வழியை காட்டும்’’ என்றார்.