சென்னை: தமிழகஅரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அந்த விளம்பரங்களில், பாஜகவினர் அத்துமீறி பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை. பாஜகவினர் என்பதால் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 95 ஆண்டுகளாக நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா இதுவரை ஒருமுறை கூட ஏற்று நடத்தியதில்லை. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இப்போட்டிகள் தற்போது, சென்னைக்கு அருகில் நடைபெறுவது வரவேற்புக்குரியது. மிகுந்த பொருளாதார இடர்பாடுகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அசுர வேகத்தில் ஏற்பாடுகள் நடைபெறுவது மிகுந்த பாராட்டுக்குரிதாகும்.
இந்த சிறப்புமிகு ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருக்கிறார். அதற்கான விளம்பர பலகைகள் பரவலாக வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடை யில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர். அந்த வீடியோ வைரலானதால் பலரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்த அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்படாத போது, தமிழக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் அவரது படம் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் படம் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் தான் பாஜகவினர் அத்துமீறி பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை.
பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. இத்தகைய பாரபட்ச போக்கை தமிழக காவல்துறையினர் கைவிட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.