டில்லி

காத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த ந்ள் விழாவையொட்டி திரையுலக பிரமுகர்களைப் பிரதமர் மோடி சந்தித்தார்.

மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாள் கடந்த 2 ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது.   அதையொட்டி குஜராத் மாநிலம் சபர்மதி காந்தி ஆசிரமத்தில் பிரதமர் மோடி வருகையின்  போது தூய்மை இந்தியா திட்ட நிகழ்வு ஒன்று நடந்தது.  அப்போது மோடி இந்தியாவைத் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா நாடாக அறிவித்து காந்தி படம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார்.

நேற்று டில்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்தோரைப் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   இதில் பிரபல இந்தி  நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அது பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் மகாத்மா  காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி புகழ்ந்தார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘ChangeWithin’ என்ற ஹேஷ்டேக்கில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட நடிகர் அமீர்கான், ”முதற்கண் இந்த முயற்சியைப் பற்றி சிந்தித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடியின் மகாத்மா காந்தியின் போதனைகளைப் பரப்ப எடுக்கும் நடவடிக்கைகளுக்காக நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.   நாம் படைப்பாற்றல் நபர்கள் என்பதால் நாங்கள் செய்யக்கூடியவை ஏராளம் ஆகும்.   ஆகையால் நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன்” என்றார்.

இதே நிகழ்வில் நடிகர் ஷாருக்கான், ”பிரதமர் மோடிக்கு எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்தமைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்,  மகாத்மா காந்தியை இந்தியாவுக்கும், உலகுக்கும் மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என  நான் கருதுகிறேன்” எனக் கூறி உள்ளார்.