லக்னோ: தனது தோல்வி நன்றாக தெரிந்துவிட்ட காரணத்தினாலேயே, பிரதமர் நரேந்திர மோடி, பேச்சை மாற்றி எங்கள் கூட்டணியைப் பற்றி தவறானதைப் பேசுகிறார் என்று தாக்கியுள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
சமீபத்தில் பேசியிருந்த பிரதமர் மோடி, “காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும், ரகசிய உறவை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாயாவதியை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தங்களின் ரகசிய சதியை அறியாத வண்ணம் மாயாவதியை இருட்டில் வைத்துள்ளனர்.
அவரைப் பிரதமராக்குவோம் என்றும் போலி வாக்குறுதியை அளித்துள்ளனர். ஆனால், மாயாவதி இதை தற்போது உணர்ந்துள்ளதால்தான், அவர் வெளிப்படையாக காங்கிரசை விமர்சித்து வருகிறார்” என்று பேசியிருந்தார் மோடி.
ஆனால், இதற்கு பதிலளித்த அகிலேஷ், 4 கட்ட தேர்தல்களின் முடிவில் அவர்களுக்குத் தெரிந்துவிட்டது தாங்கள் தோல்வியடையப் போகிறோம் என்று. அதனால்தான் நாட்டின் வளர்ச்சியையும் பிரச்சினையையும் குறித்துப் பேசாமல், எதையெதையோ பேசுகிறார்கள்.
அவர்களின் எண் கணக்கு தப்பாகிவிட்டது. தங்களால் எப்படியும் அரசமைக்க முடியாது என்பதும் அவர்களுக்குப் புரிகிறது. எனவே, வேறு வழியின்றி மக்களை தவறாக வழிநடத்த முனைகிறார்கள்.
சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் – ராஷ்ட்ரிய லோக்தள் கூட்டணிதான், அடுத்து யார் மத்தியில் அரசமைப்பார்கள் மற்றும் யார் பிரதமராக இருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது என்றார்.