பெங்களூரு

பிரதமர் மோடி அரிதாரம் பூசி ஒப்பனை செய்துக் கொள்வதால் அழகுடன் மிளிர்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் 18 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.   வரும் மே மாதம் 23 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணியில் வடக்கு பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணா பைரே கவுடா போட்டியிடுகிறார்.   இவருக்கு ஆதரவாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.   இந்த தொகுதியில் ஒக்கலிகா இனத்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இந்த பிரசார கூட்டத்தில் பேசிய குமாரசாமி, “பிரதமர் மோடி மக்களை சந்திக்கும் போதோ அல்லது காமிரா முன்பு தோன்றும் போதோ அரிதாரம் பூசி ஒப்பனை செய்துக் கொள்கிறார்.   அதனால் அவர் அழகுடன் மிளிர்கிறார்.   ஒப்பனை செய்த பிறகே அவர் காமிரா முன்பு வருகிறார்.   அவர் முகத்தில் அந்த மினுமினுப்பு தெரிகிறது.

நமது முகத்தை பாருங்கள்.   காலியில் குளித்து விட்டு கிளம்பினால் மீண்டும் அடுத்த நாள் காலை தான் குளிக்கிறோம்   அதனால் நமது முகம் காமிரா முன்பு அழகாக தெரிவதில்லை.  அதனால் நமது ஊடக நண்பர்களும் நமது முகத்தை காட்ட விரும்புவதில்லை.  அவர்கள் மோடி மோடி என அவர் பின்னாலேயே செல்கின்றனார்.

அது மட்டுமல்ல பாஜகவினரும் மோடியை பாருங்கள்.  பாஜகவுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் செய்கின்றனர்  அவர்கள் ஒரு போதும் எங்களை பாருங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என சொல்வதே கிடையாது.   மோடியை பார்த்து மட்டுமே வாக்களிக்க சொல்கின்றனர்.” என பேசி உள்ளார்.