வயநாடு
பிரதமர் மோடி மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது வயநாடு தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி மானந்தாவடியில் மகாத்மா காந்தி உருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.
ராகுல் காந்தி தனது உரையில் “தேசத் தந்தை மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். அவர் இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என சொன்னதுடன் மட்டுமல்லாமல் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார். அவர் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறி பெண்களை மரியாதையுடன் நடத்தினார்.
ஆனால் இன்று நம்மிடையே இருக்கும் பலர், நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள், பிறகு அவர்களே மற்றவர்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள். அவர்கள் பெண்களை மதிக்கும் இந்தியா வேண்டும் என்று கூறுகிறார்கள் அவர்களே பெண்களை மதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு மதச்சார்பற்ற தேசத்தை விரும்புவதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவர்களே மதங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்கிறார்கள். மொத்தத்தில் மத்ஸசார்பெற்ற கொள்கையை கடைபிடிப்பதில்லை ” என மோடியைக் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.