டில்லி

பிரதமர் மோடி காங்கிரசை விட ஒரு திறமையான விற்பனையாளர் என்பதால் ஆட்சியை பிடித்துள்ளார் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது மக்களவை காங்கிரஸ் தலைவராக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆதிர் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவாதத்தின் போது பல பாஜக உறுப்பினர்கள் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தற்கு அவரை மிகவும் பாராட்டினார்கள்.

இந்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, “பிரதமருக்கு பலரும் புகழ் மழை பொழிந்து வருகின்றனர். அதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதற்கு மேல் போனால் அவரால் நீந்தி வர முடியாது. மோடி ஒரு முறை தனது ஆட்சியின் மூலம் இந்தியா புகழ் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள்ளார். அப்படியானால் வாஜ்பாய் ஆட்சி மோசமானதா?

இந்த தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் மக்கள் பணியை தொடர்வோம். மோடி ஒரு அற்புதமான விற்பனையாளர். காங்கிரஸை விட பன்மடங்கு திறமையான விற்பனையாளர். அதனால் அவரால் தரமற்ற பொருளை விற்று ஆட்சி அமைக்க முடிந்தது. காங்கிரசின் விற்பனை திறமையின்மையால் தரமான பொருளை விற்க தெரியாமல் தோற்று விட்டது.” என தெரிவித்துள்ளார்.