சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி – LTCG) வரியை 12.5% ​​ஆகக் குறைத்துள்ளதாகவும் LTCG வரியைக் கணக்கிடுவதில் குறியீடு (Indexation) நீக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தை கொள்ளையடிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

LTCG வரியைக் கணக்கிடுவதில் குறியீட்டை (indexation) நீக்குவது அனைவரையும் எவ்வாறு பாதிக்கும்.

சொத்துகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரியை 12.5% ​​ஆகக் குறைத்துள்ளதாக கூறியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொத்து விற்பனையின் போது அதன் மதிப்பை கூட்டிக்காட்ட LTCG வரிக் கணக்கிடுவதற்கான குறியீட்டை நீக்கியுள்ளார்.

நிர்மலா சீதாராமனின் இந்த புதிய அறிவிப்பால் 2009ல் ₹50 லட்சத்திற்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஒருவர் 15 ஆண்டுகள் கழித்து தற்போது ₹1.5 கோடிக்கு விற்பனை செய்தால் அவரது நிகர லாபம் வெறும் ₹5 லட்சம் மட்டுமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளது .

காஸ்ட் இன்ஃப்ளேஷன் இன்டெக்ஸ் (CII) அளவீடுகள் படி 2001-02ல் ₹100 இன் மதிப்பு இப்போது ₹363 ஆக உள்ளதாக இந்திய அரசு வெளியிட்டிருக்கும் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2009ல் ₹50 லட்சம் என்பது இப்போது ₹1.32 கோடியாகக் கருதப்படுகிறது.

புதிய நடைமுறையில், 2009ல் ₹50 லட்சத்திற்கு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பை இன்று ₹1.5 கோடிக்கு விற்பதன் மூலம் மூலதன ஆதாயம் இப்போது ₹1 கோடியாகும்.

LTCG வரி 12.5% ​​ஆக குறைந்தாலும், வரியாக ₹12.5 லட்சம் செலுத்த வேண்டும்.

https://x.com/INCKerala/status/1815784010293084639

இதற்கு முன் இருந்த நடைமுறையில், குறியீட்டுடன் ஒப்பீடு செய்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செலுத்திய ₹50 லட்சம் இன்றைக்கு ₹1.32 கோடியாகக் கருதப்படுகிறது. எனவே, நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் ₹17.5 லட்சம் மட்டுமே, மேலும் 20% என்ற விகிதத்தில் மூலதன ஆதாய வரியாக ₹3.5 லட்சம் மட்டுமே செலுத்த வேண்டி இருந்தது.

ஆனால், LTCG வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்திருப்பதன் மூலம் பழைய முறையை விட அரசுக்கு கூடுதலாக ₹9 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

15 வருடத்திற்கு முன் ₹50 லட்சத்திற்கு வாங்கிய ஒரு சொத்தை தற்போது ₹1.50 கோடிக்கு விற்பனை செய்தாலும் கடனுக்கான வட்டி குறித்த கணக்கீடு இல்லாமல் வெறும் ₹5,01,825 மட்டுமே நிகர லாபமாக கிடைக்கும்.

நடுத்தர வர்க்கத்தினரை தண்டிக்க மோடி அரசு கண்டுபிடித்திருக்கும் புதிய வழிமுறை தான் இந்த LTCG வரி மாற்றம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.