பொதுவாக, இந்திய நாட்டின் அமைப்பின்படி, மக்கள் என்பவர்கள் நேரடியாக மாநில அரசுகளுடன் தொடர்புடையவர்கள். மாநில அரசுகள்தான் அவர்களுடன் நேரடியான தொடர்பையும், உறவையும் கொண்டுள்ளது.
ஆனால், அதிகாரங்கள் என்னவோ, மக்களுடன் நேரடியாக தொடர்பில் இல்லாத மத்திய அரசிடம்தான் குவிந்துள்ளன. மக்களுக்கான சேவைகளை செய்யும் உள்கட்டமைப்புகள் மாநில அரசிடமே உள்ளன.
ஆனால், அதிகளவு நிதி மத்திய அரசிடமே குவிந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில வளர்ச்சியடைந்த மாநிலங்கள், தங்கள் நிதியை டெல்லியிடம் கொடுத்துவிட்டு, தேவைக்காக கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.
இந்திய ஒன்றியத்திலேயே முதன்முதலாக, மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்கான ஒரு தனி கமிஷனை அமைத்து, பெரிய அதிர்வை உண்டாக்கியப் பெருமை கொண்டது தமிழகம்தான்! ஆனால், இன்று அதே தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்..!
மத்தியில் மிகத் தீவிர வலதுசாரி தன்மைக்கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்ததுமுதல், மாநிலங்களுக்கென்று இருக்கும் அதிகாரங்களையும் உரிமைகளையும் எப்படியெல்லாம் பிடுங்கிக் கொள்ளலாம் என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து வருகிறது.
கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் அந்தக் கட்சி இதற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்று விமர்சனங்கள் எழுகின்றன. இப்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பையும்கூட அதற்கான ஒரு வாய்ப்பாக அக்கட்சி பயன்படுத்திக் கொள்வதை சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை மிகச் சாதாரணமாக வரிச்சலுகையாக அறிவிப்பவர்கள், கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இப்போது கைவைக்கப்பட்டுவிட்டது பேசு பொருளாகியுள்ளது!
மேலும், கொரோனா நிவாரணங்களுக்காக மாநிலங்களுக்கு அள்ளி வழங்க வேண்டியத் தொகையை, பல தடைவைகள் கேட்டும், ரூ.500 கோடி மற்றும் ரூ.1000 கோடி என்று சம்பிரதாயமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், மாநில முதல்வர்களின் நிவார நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் சிஎஸ்ஆர் வரம்பிற்குள் வராது என்ற புதிய அறிவிப்பும் இப்போது வெளியாகியுள்ளது.
இதன்மூலம், உண்மையில், நடைமுறைரீதியாக களத்தில் செயல்பட வேண்டிய மாநில அரசுகளின் கைகளை கட்டிப்போட்டு, அவற்றுக்கு எஞ்சியிருக்கும் அதிகாரங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இந்த கொரோனா வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு செயல்படுகிறது இந்த மத்திய அரசு என்பது விமர்சகர்களின் கணைகளாக இருக்கின்றன.