கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவராஜ் எஸ்.தங்கடகி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொப்பலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி இரண்டு கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தார்.

அவர் கொடுத்தாரா? ‘மோடி மோடி’ என்று முழக்கமிடும் அவரது ஆதரவாளர்கள் வெட்கப்பட வேண்டும். இளைஞர்களை ஏமாற்றிவருபவர்களை அறைய வேண்டும்” என்று பேசினார்.

மேலும், “கடந்த 10 வருடங்களாக எல்லாவற்றையும் பொய்களால் கட்டமைத்துள்ளனர். அதனால் இன்னும் 5 ஆண்டுகள் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அவை எங்கே? ஒரு ஸ்மார்ட் சிட்டி பெயரை கூறுங்கள்.

கடலின் ஆழத்திற்கு சென்று அங்கு பூஜை செய்வது போல் ஸ்டண்ட் அடிக்கிறார். ஒரு பிரதமர் செய்யும் வேலை இதுதானா?” என்று விமர்சித்தார்.

கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது.