புதுடெல்லி: கடந்தாண்டு அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு, மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது மத்திய அரசு.
ஐஏஎஸ் & ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்டோபரில் நடந்து முடிந்தது.
வயது வரம்பின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது; கொரோனா ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக பலர் தேர்வுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டது.
தேர்வு நடைபெற்ற நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை-வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாகவும் பலர் தேர்வை நழுவவிட்டனர். வயது வரம்பின் அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘வயது வரம்பு அடிப்படையில் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்காக மீண்டும் மறு தேர்வு நடத்த முடியாது’ என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்த மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.