புதுடெல்லி: மத்திய மோடி அரசு நமது வீரர்களின் தியாகத்தை அவமதித்து, நமது பகுதியை சீனாவிடம் விட்டுத்தருகிறது என்று கடுமையான சாடியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

லடாக்கிலுள்ள பேங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் துருப்புகளை விலக்கிக் கொள்வது என்று இந்தியாவும் சீனாவும் முடிவெடுத்துள்ளதாக, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து இவ்வாறு சாடியுள்ளார் ராகுல் காந்தி.

இந்தியா, சீனாவிடம் எந்தப் பகுதியையும் இழந்துவிடவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

லடாக்கில், இந்திய – சீன துருப்புகளிடையே ஏற்பட்ட மோதலுக்கு முன்னதாக இருந்த நிலை மீண்டும் திரும்பாமல், அமைதி ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றுள்ளார் ராகுல் காந்தி. அதாவது, லடாக்கில் இந்தியாவின் கட்டுப்பாடு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றுள்ளார் அவர்.

தற்போது, ஏரிக்கு அருகில், துருப்பு நடமாட்டங்களை ரத்து செய்வது என்ற உடன்பாட்டிற்கு இந்தியா ஒத்துக்கொண்டிருப்பதன் மூலம், வீரர்கள் செய்த உயிர் தியாகத்தை மோடி அரசு அவமதிக்கிறது மற்றும் இந்தியப் பகுதியை சீனாவுக்கு விட்டுக் கொடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.