புதுடெல்லி :
இந்தியாவின் பிரதான 3 ஆங்கில நாளிதழ்களுக்கு வழங்கப்பட்டு வந்த விளம்பரத்தை மோடி அரசு நிறுத்தியது, ஜனநாயக விரோத செயல் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா,தி இந்து, டெலிகிராப் ஆகிய ஆங்கில நாளிதழ்களை பழிக்குப் பழி வாங்கும் வகையில் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து பத்திரிக்கை துறை தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது.
தற்போது இரண்டரை கோடி விற்பனையாகும் 3 பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரத்தை, மீண்டும் பதவியேற்ற மோடி அரசு நிறுத்தியுள்ளது.
இது ஜனநாயக விரோத செயல். மோடி அரசு பெரியண்ணன் தனமாக செயல்பட்டு விளம்பரங்களை
நிறுத்தியுள்ளது.
எதிர்த்து எழுதும் பத்திரிக்கைகளை அடிபணிய வைக்கும் செயல்பட்டு இது என்றார்.
டைம்ஸ் நாளேட்டுக்கு வரும் விளம்பரங்களில் 15%, அரசிடமிருந்து வரும் டெண்டர் மற்றும் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்து நாளிதழைப் பொறுத்தவரை,ரபேல் பேரம் தொடர்பாக புலனாய்வு செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி எதிர்கட்சிகளின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆயுதமாக இருந்தது.
இதுவே விளம்பரம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் தரப்பில் கூறும்போது, இன்னும் அரசிடமிருந்து அடுத்தகட்ட தகவல் ஏதும் வரவில்லை. அரசு கொடுத்து வந்த விளம்பரங்களை ஈடுகட்ட மாற்று வழி குறித்து ஆராயப்படும் என்றனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜக தரப்பில் கூறும்போது, இப்போதும் இந்தியாவில் பத்திரிக்கைகள் சுதந்திரத்துடன் செயல்படுவதாக கூறினார்.