ஜி.எஸ்.டி பங்கை மாநிலங்களுக்கு வழங்க பணம் இல்லை – மத்திய அரசு “கைவிரிப்பு”

 

வாழப்பாடி இராம. சுகந்தன்

 
சென்னை :

ஜி.எஸ்.டி பங்கை மாநிலங்களுக்கு வழங்க பணம் இல்லை என்று மத்திய நிதித்  துறைச்  செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.

5 ரஃபேல் போர் விமானங்கள் இரண்டு சுகோய் விமானங்கள் பாதுகாப்புடன் வருவதை வேறொரு விமானத்தில் இருந்து “வானத்தில் பறப்பதை மட்டும்  படம்பிடித்து கொண்டாடி வரும்” வேலையில், மாநில அரசுகளுக்கு தரவேண்டிய இழப்பீட்டை தராமல் தவிக்க விடும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பலரின் கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளப் பட்டுள்ளது.
வரி வசூல் உள்ளிட்ட அரசின் வருவாய் பணம் அந்தந்த நிதி தொகுப்பில் வரவு வைக்கப்படுகிறதா என்பது யாருக்கும் புரியாத வகையில் கோவிட் 19 தொற்றுநோயை காரணமாக கூறி மாநிலங்களுக்கு  நிதி வழங்க பணமில்லை என்று கணக்கு கூறி வருகிறது மத்திய அரசு.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும்  ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது கோவிட் 19 தொற்றுநோய் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சியாகவே இது தோன்றுகிறது.
2018 ம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.18 சதவீதமாக இருந்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2019 ம் ஆண்டு முழுக்க சரிவை சந்தித்து 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 3.09 சதவீதமாக குறைந்தது, இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத சரிவாகும். ஆறு ஆண்டுகளாக மோடி அரசின் தவறான கொள்கைகளாலும் நிர்வாக  திறமையின்மையாலும் இந்திய பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில், தொற்றுநோயை காரணம் காட்டி தப்பிக்க முயற்சிக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி பங்கை வழங்க வழி செய்து சட்டம் கொண்டுவந்த நிலையில், 2020 ஏப்ரல் மாதம் முதல் பணம் வழங்கவில்லை. கொரோனா வைரசுக்கான போராட்டத்தில் மாநில அரசுகள் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை தீர்க்க மத்திய அரசு முன்வராததையே இது காட்டுகிறது.
பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஜிஎஸ்டி சட்டத்தில் ஒப்புக் கொண்டபடி இழப்பீடு வழங்காதது கூட்டாட்சித் தத்துவத்தில் மாநில அரசுகளில் உரிமையை பறிக்கும் செயல் என்று குரல்  கொடுத்து வருகின்றன, அதே நேரத்தில் மற்ற பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த விஷயத்தில் பெரும்பாலும் அமைதியாக இருக்கின்றன.  தமிழக அரசும் இதுகுறித்து மௌனம் காத்துவருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய இரண்டு மாத சம்பளத்திற்கு சமமான ஜிஎஸ்டி இழப்பீட்டுப் பணம் கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளதாக பஞ்சாப் கூறி வருகிறது.
கேரளவோ, “கூட்டாட்சி தத்துவத்திற்கு செய்யும்  துரோகம்” என்று குறிப்பிட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் தங்களுக்கு வரவேண்டிய ரூ .4,135 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதமெழுதியிருக்கிறார்.

பெருமுதலாளிகள் ஒருபுறம் பங்கு வர்த்தகத்தில் கொழுத்த லாபம் பார்ப்பதும், அதனால் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக மாய தோற்றத்தை உருவாக்கி வரும் பா.ஜ.க. அரசு பொருளாதார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை புறக்கணிப்பதன் மூலம், இந்திய பொருளாதாரத்தை, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதுடன் கற்பனை செய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்த  இருப்பது நிச்சயம்.