சென்னை

மோடி அரசு தொழில் நிறுவனத்துக்கான சலுகைகளை நிறைவேற்றத் தவறி விட்டதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கின.   இதனால் கடும் பொருளாதார இழப்பு மற்றும் வேலை இன்மை ஏற்பட்டது.  இதையொட்டி மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தது.  ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன.

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாம் அலை கொரோனாவின் போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. இந்நிறுவனங்களுக்கு முதல் அலையின்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் பாதி அளவுக்குக்கூட நிறைவேறவில்லை.

அது போல்  இப்போதைய அறிவிப்புகளும் எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாதந்தோறும் மூடப்பட்ட வருவதால், பலரும் வேலை இழந்து வருகின்றனர்.  இந்த நிறுவனங்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடனாக ரூ.3 லட்சம் கோடியை வழங்குவதாகக் கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இதுவரை அதில் பாதி அளவு கூட வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 44 சதவீத குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களையும் இதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்டெடுக்க வேண்டும். மோடி அரசு  வழக்கம் போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகாமல், தமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.