புதுச்சேரி:

புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியஅரசு, கொரோனா நிவாரண நிதியாக ஏதும் ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டிருப்பது, அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளதாக  2,010 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மாநில முதல்வர் தெரிவித்து உள்ளார்,. மேலும கொரோனா நோயாளிகளுக்காக  புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை 700 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 4 பேர் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் 28 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக மத்தியஅரசு பில கோடிகளை ஒதுக்கி உள்ளது.  ஆனால், இதில் புதுச்சேரிக்கு ஒரு பைசாகூட ஒதுக்காதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் , ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள  அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  நிவாரணம் வழங்கும் வகையில் நிதி உதவியாக ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்ததுடன்,   அதற்காக மத்திய அரசிடம் ‘995 கோடி நிதி கேட்டிருக்கிறார்.

ஆனால், மத்தியஅரசோ, அதை காதில் போட்டுக்கொள்ளமல், ஏற்கனவே  சுகாதாரத்துறைக்கு  ரூபாய் 7.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் துறைக்கு ரூபாய் 12.5 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து, தற்போது ஏதும் தர முடியாது என்று கைவிரித்து உள்ளது.

இது மாநில அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில்,   மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாராயணசாமி அரசு,  இனி வரும் காலம்  இக்கட்டான காலம். இச்சமயத்தில் மாநில அரசு அனைத்து சுமைகளையும் ஏற்க முடியாது. மத்திய அரசு துணைக்கு வர வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

மத்தியஅரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை, மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.