டில்லி,
பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி பேசும்போது காங்கிரஸ் கட்சி மீதும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு மீதும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மோடியின் பேச்சு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி தேசிய பிரச்சனைகள் பற்றி பேசாமல், காங்கிரஸை மட்டுமே குற்றம் சாட்டி வருகிறார் என்றார். பிரதமர் பதவியில் இருப்பதையே மோடி மறந்துவிட்டு பேசுகிறார் என்று கிண்டலடித்தார்.
மேலும், 90 நிமிடங்கள் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை என்றும், ‘ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்தோ, விவசாயிகள் பிரச்சினை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்தோ பிரதமர் மோடி எதுவுமே கூறவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பொதுக்கூட்டத்தில் பேசுவதை நாடாளுமன்றத்தில் பேசுவதாக கூறிய ராகுல், இன்று பாராளுமன்றத்தில் அரசியல் மட்டும் தான் மோடி பேசியுள்ளார் , தான் பிரதமர் பதவியில் இருப்பதை மறந்துவிட்டார்போல என கிண்டலடித்தார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு மாறாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.
இவ்வாறு ராகுல் கூறினார்