டெல்லி:
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று இரவு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இரண்டு முறை மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இன்று மீண்டும் உரையாற்றுவார் என்று தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு ஊரடங்கு வரும் 14ந்தேதி உடன் முடிவடைய உள்ளது. ஆனால், தற்போதுதான் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால், ஊரடங்கை ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்க பல மாநில அரசுகள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக ஏற்கனவே பிரதமர் இன்று காலை மாநில முதல்வர்களுட்ன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது.