புதுடெல்லி: பொதுவாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி நல்லவிதமாக செய்தி வருவதில் கவனம் செலுத்தும் மோடி குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகையில், ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்பதாக குறிப்பிட்டு அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்துவரும் வேளையில், அப்பத்திரிகையின் இப்படியான கட்டுரை, பெரிய அதிர்வலைகளை மோடி ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மோடி குறித்த கட்டுரையின் முதல் வாக்கியமே, “ஜனரஞ்சக கொள்கையை நோக்கிச் சென்ற உலகின் பெரிய ஜனநாயகங்களுள், இந்தியாவே முதல் நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மோடியின் ஆட்சியில் அடுத்த 5 ஆண்டுகள் தாக்குப்பிடிக்குமா?” என்றே அக்கட்டுரை தலைப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில், “கடந்த 2014ம் ஆண்டு தேர்தலையடுத்து மோடி பதவியேற்ற பின்னர், இந்தியாவின் குணாம்சம், அதன் தலைவர்கள், சிறுபான்மையினரின் நிலை, நிறுவனங்கள் போன்றவை தங்களின் நம்பகத் தன்மையை இழந்துள்ளன.
மேலும், இந்திய ஜனநாயகத்தின் அம்சங்களான மதசார்பின்மை, ஊடக சுதந்திரம் மற்றும் தாராளவாதம் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன” என்பன போன்ற பல குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.